தமிழ்நாட்டுக் கிளிகள்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சிறுவர்களுக்காக வெளியிடும் “துளிர்,” அறிவியல் மாத இதழில் ஜூன் 2017 பிரசுரமானக் கட்டுரையின் முழு வடிவம். எழுத்து: சு. வே. கணேஷ்வர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நரை அணில் சரணாலயத்தில் (Grizzled Squirrel Wildlife Sanctuary) மூன்று நாட்கள் பறவைகள் கணக்கெடுப்பு நடத்த தமிழ்நாடு வனத்துறை திட்டமிட்டு அனுபவமுள்ள பறவை ஆர்வலர்களை அழைத்திருந்தது. இந்தியாவில் கொண்டை வல்லூறு பற்றிய ஆராய்ச்சிகளில் தலைசிறந்தவரான சஷிகுமார், என்னையும் இக்கணக்கெடுப்பில் பங்குகொள்ளச் சொன்னார். தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து பல அனுபவமிக்க பறவை ஆர்வலர்கள் இராஜபாளையத்திற்கு வந்திருந்தனர். குழுவுக்கு இரண்டு நபர்களாகப் பிரித்து சரணாலயத்தின் பல்வேறு இடங்களில் கணக்கெடுப்பு நடத்துவதே திட்டம். வழிகாட்டுதலுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் இரண்டு வனத்துறை ஆட்கள் உடன் வந்தனர்.

யானைக்காசம் முதல் கன்னிமார் கோயில் வரை

என்னுடன் பாம்புகள் பிடிப்பதில் அனுபவமுள்ள கிஷோர் குமாரும் வந்தார். கணக்கெடுப்பிற்காக எங்களுக்கு தரப்பட்ட பகுதி யானைக்காசத்திலிருந்து கன்னிமார் கோயில் வரை. முதல் நாள் மாலை இராஜபாளையத்திலிருந்து கிளம்பி காட்டிலுள்ள தங்கும் முகாமை அடையவே இரவு 10.30 மணி ஆகிவிட்டது. மறுநாள் விடியற்காலை எழுந்தவுடன் நடுகாட்டில் அத்துனைப் பறவைகளின் இனியகானம் உள்ளத்தை உற்சாகத்தில் நனைத்தது. கண் விழித்துப் பார்த்ததும் முதலில் தென்பட்டது கருந்தலை மாங்குயில் (Black-hooded Oriole). ஆஹா! ஒவ்வொரு நாளையும் இதுபோல் அல்லவா தொடங்க வேண்டும்! என்னே ஒரு அழகான பறவை!

BHOR by Vijayalakshmi Rao
கருந்தலை மாங்குயில். படம்: விஜயலக்ஷ்மி ராவ்

கணக்கெடுப்பு முடியும் வரை அதிக எண்ணிக்கையில் இருந்த பறவைகளில் இதுவும் ஒன்று. வலசைக் காலம் முடிந்த பிறகும் ஆறுமணிக்குருவி (Indian Pitta), பச்சைக் கதிர்க்குருவி (Green Warbler), வேலி கதிர்க்குருவி (Blyth’s Reed Warbler), பழுப்புக் கீச்சான் (Brown Shrike) போன்ற விருந்தாளிப் பறவைகளைக் காண சற்றே வியப்பாக இருந்தது. கணக்கெடுப்பின் போது தமிழகத்தின் நான்கு கிளி இனங்களையும் ஒரே நாளில் பார்த்தது அளவற்ற மகிழ்ச்சியைத் தந்தது. அனைத்து நாட்களும் ஒரு சேர பார்க்கக் கூடிய நிகழ்வல்லவே அது!

கிளிகளின் பொதுப் பண்புகள்

இந்தியாவில் 11 கிளி இனங்கள் காணப்படுகின்றன. அனைத்துமே பச்சை நிறம் கொண்டவை. குட்டைக் கிளியைத் தவிர மற்ற கிளிகளுக்கு நீண்ட வால் இருக்கும். வளைந்த, உறுதியான அலகுகள் கொட்டைகளைக் கொறிப்பதற்கு பயன்படுகிறது. பெரும்பாலான கிளிகள் எப்போதும் கத்திக்கொண்டும் கூட்டமாக வாழும் பண்புடையவை. உணவு அதிகம் கிடைக்கும் இடங்களில் கிளிகள் அதிக எண்ணிக்கையில் கூடும். பழங்கள், பூமொட்டுக்கள், போன்றவற்றையும் கிளிகள் உண்ணும்.

பச்சைக் கிளி (Rose-ringed Parakeet) 

“ஜோசியம்… கிளி ஜோசியம்…” என்று கூண்டுகளில் அடைத்து நம் தெருக்களில் எடுத்து வரப்படுவது இக்கிளியே. ஆண் கிளிக்கு கழுத்தில் கருப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் வளையம் இருப்பது போல பெண்ணுக்கு இருக்காது. பெரிய பச்சைக் கிளியின் (Alexandrine Parakeet) சிறு வடிவம் போல் இருந்தாலும் இவற்றுக்கு தோளில் அரக்கு நிறப் பட்டை இருக்காது. தமிழகத்தில் பரவலாகத் தென்படும் இக்கிளி கணக்கெடுப்பின் போதும் அதிக எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்டது.

RRPA by Udaya Kumar
பச்சைக் கிளி. படம்: உதய குமார்

செந்தலைக் கிளி (Plum-headed Parakeet) 

இது பச்சைக் கிளியை விட உருவில் சற்று சிறிதாக இருக்கும். ஆண் பறவையின் தலை சிவப்பு நிறத்திலும் கழுத்தில் கருப்பு வளையமும் தோளில் சிறிய சிவப்பு நிறப் பட்டையும் இருக்கும். பெண் கிளியின் தலை சாம்பல் நிறத்திலும் கழுத்தில் வளையமின்றியும் தோளில் சிவப்பு நிற பட்டையும் இல்லாமல் காணப்படும். இரண்டு பறவைகளின் மேல் அலகு மஞ்சள் நிறத்திலும் கீழ் அலகு கருப்பு நிறத்திலும் இருக்கும்.

PHPA by Vijayalakshmi Rao
செந்தலைக் கிளி. படம்: விஜயலக்ஷ்மி ராவ்

சோலைக் கிளி (Malabar Parakeet) 

மேற்கு தொடர்ச்சி மலைகளில் வாழும் இக்கிளி ஒரு ஓரிடவாழ்வி (endemic). செந்தலைக் கிளியின் அளவுள்ள இது சிறிது சாம்பல் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும். ஆண் பறவையின் அலகு சிவப்பு நிறத்திலும் பெண்ணின் அலகு கருப்பாகவும் இருக்கும். இரண்டிற்குமே கழுத்தில் கருப்பு நிற வளையம் இருக்கும். ஆனால் ஆணின் கழுத்தில் கருப்பு வளையத்தைச் சுற்றி நீலம் கலந்த பச்சை வளையமும் காணப்படும்.

MAPA by Udaya Kumar
சோலைக் கிளி. படம்: உதய குமார்

சின்னக் கிளி (Vernal Hanging Parrot) 

இந்தியாவின் மிகச் சிறிய கிளி இனமான இப்பறவை சிட்டுக்குருவியின் அளவு இருக்கும். உடல் பச்சை நிறத்திலும் அலகும் கீழ் முதுகும் சிவப்பு நிறத்திலும் வால் குட்டையாகவும் இருக்கும். ஆண் பறவையின் தொண்டையில் சிறிய நீல நிற இறக்கைகள் தென்படும். இவை பசுமைமாறாக் காடுகளிலும் ஈரப்பதமான குறுங்காடுகளிலும் வசிக்கும்.

VHPA by Vijayalakshmi Rao
சின்னக் கிளி. படம்: விஜயலக்ஷ்மி ராவ்

 

குறிப்பு: Alexandrine Parakeet தமிழ்நாட்டில் சில இடங்களில் பார்க்கப்பட்டிருந்தாலும் அவை அனைத்தும் கூண்டிலிருந்து தப்பித்தக் கிளிகளாகவே கருதப்படுகின்றன. இயற்கையான வாழிடங்களில் அக்கிளியின் இனப்பெருக்கத்தை தமிழ்நாட்டில் பதிவு செய்தால் மட்டுமே அது அதிகாரப்பூர்வமான தமிழ்நாட்டுப் பறவைப் பட்டியலில் சேர்க்கப்படும்.