பறவையைத் தொடரும் சேலத்துப் பெண்கள்

தி இந்து நாளிதழின் உயிர் மூச்சுப் பகுதியில் மே 11, 2019 அன்று வெளியானக் கட்டுரையின் முழு வடிவம். எழுத்து: சு.வே. கணேஷ்வர், சேலம் பறவையியல் கழகம். To read the English version of the article, please click here.

சென்னை, கோவையைப் போன்று பறவை நோக்குதலுக்கென பெரிதும் அறியப்பட்ட மாவட்டமாக சேலம் அண்மைக்காலம் வரை இல்லாமல் இருந்தது. பெண் ஆர்வலர்களை விடுங்கள். ஆறேழு வருடங்களுக்கு முன்னால் விரல் விட்டு எண்ணும் அளவிற்குத் தான் ஆண் பறவை ஆர்வலர்களின் எண்ணிக்கையும் இந்த மாவட்டத்தில் இருந்தது. அத்தகைய சூழலில் சேலம் மாவட்டத்தில் நிறைய பெண்கள் பறவை நோக்குதலில் ஈடுபடுவதைக் காணவேண்டும் என்றொரு மாபெரும் கனவு இருந்தது.

பறவைகளுக்காக என்பது ஒரு புறமிருக்க, இன்றைக்குப் பெண்கள் நாள்தோறும் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்களில் இருந்து மனஅமைதி பெறவும் உள ஆரோக்கியத்துடன் வாழவும் பறவை நோக்குதல் மிகச்சிறந்த ஆசுவாசப்படுத்தும் அம்சமாக இருக்கும் என்பதே இந்தக் கனவுக்கான முக்கியக் காரணம். ஆண், பெண் பேதமின்றி அனைவரும் இயற்கையோடு ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருப்பது மிகவும் அவசியம். இதற்கான முயற்சிகள் சேலத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தன. என்றைக்காவது ஒரு நாள் மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கை இருந்தது.

இன்று சேலத்தின் பறவை ஆர்வலர்கள் பல்வேறு செயல்பாடுகளில் முன்னிலை வகிக்கின்றனர். அதற்கு பெண்களின் பெரும் பங்களிப்புக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் முதல் குடும்பப்பெண்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் வரை தற்போது 80க்கும் மேற்பட்ட பெண்கள் பறவை ஆர்வலர்களாக மாறியிருக்கிறார்கள்.

பறவைகள் மீது அவர்கள் கொள்ளும் அன்பும் அவற்றுக்காக களத்தில் பல மணி நேரம் செலவிடும் அர்ப்பணிப்பும் இன்று பலருக்கும் எடுத்துக்காட்டாய் திகழ்கிறது. விழிப்புணர்வுக் கூட்டங்களில் பேசுவது, பறவை நோக்கும் பயணங்களை வழிநடத்திச் செல்வது, கணக்கெடுப்புகளில் பங்குகொள்வது என சேலத்தின் பெண் பறவை ஆர்வலர்கள் பறவை நோக்குதலின் பல்வேறு அம்சங்களிலும் தங்கள் பங்களிப்பை இன்றைக்கு வழங்கி வருகின்றனர்.

அ. வடிவுக்கரசி, 37

பிடித்த பறவை: சிறிய பஞ்சுருட்டான்
சேலத்தில் பிடித்த இடம்: பண்ணவாடி, மேட்டூர்.

Vasi

சேலம் கிருஷ்ணம்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாகப் பணி புரிகிறார். ஓவியம், பாடல்கள், கதைகள், நாடகங்கள் போன்றவற்றின் மூலம் இயற்கையோடு மாணவர்களை இணைக்கிறார். தன் பள்ளிக் குழந்தைகளுடன் தினந்தோறும் பறவை நோக்குதலில் ஈடுபடுகிறார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பில் இவருடைய பள்ளி மாணவர்கள் உலகில் முதலிடம் பிடித்துள்ளனர். அத்துடன் தன் கணவர் செந்தில் குமார் (அதே பள்ளியில் தலைமை ஆசிரியர்), மகன் சுப்ரமணிய சிவாவோடு இணைந்து தமிழ்நாட்டில் இது வரை சேலத்தில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ள வெண்கழுத்துப் பட்டாணிக்குருவியைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். பறவைகளை நோக்கத் தொடங்கி முதன்முதலாக இருநோக்கியின் வழியே பார்த்த சிறிய பஞ்சுருட்டானே இவருக்குப் பிடித்தமான பறவை.

திவ்யா சுப்ரமணி, 23

பிடித்த பறவை: வெண்மார்பு மீன்கொத்தி
சேலத்தில் பிடித்த இடம்: கன்னங்குறிச்சி மூக்கனேரி

Divya - Copy

வெண்மார்பு மீன்கொத்தியின் குரலைக் கேட்ட அடுத்த நொடியே இவரின் கண்கள் பறவையைத் தேட ஆரம்பித்துவிடும். இயந்திரப் பொறியியல் படித்திருந்தாலும் பறவைகளால் இயற்கையின் பக்கம் ஈர்க்கப்பட்டு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருபவர். பள்ளி மாணவர்கள் பல்வேறு அறிவியல் கோட்பாடுகளை எளிமையாகப் புரிந்து கொள்ள ‘எளிய அறிவியல் பரிசோதனைகள்’ போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டக் கருத்தாளராகச் செய்து வருகிறார். இந்த ஆண்டு நடைபெற்ற ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பில் தனி நபர் பிரிவில் அதிகமான பறவைப் பட்டியல்களை சமர்ப்பித்து, உலகில் இரண்டாம் இடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். பறவை நோக்குதலுக்காக கிடைக்கும் வாய்ப்புகளை இவர் தவறவிடுவதில்லை.  வெண்மார்பு மீன்கொத்தியைக் கண்டால் அந்நாள் அமைதியாக நகர்வதாகவும் முழுமை பெறுகிறது என்றும் இவர் உறுதியாக நம்புகிறார்.

மகாலட்சுமி முருகவேல், 23

பிடித்த பறவை: செம்மார்பு குக்குறுவான்
சேலத்தில் பிடித்த இடம்: பண்ணவாடி, மேட்டூர்.

Mahalakshmi

சிறிய உருவம், இலைகளை ஒத்த பச்சை நிறம், நெற்றியிலும் கழுத்திலும் பொட்டு வைத்தாற் போல சிவப்பு, மேலும் கொல்லன் பட்டறையில் இரும்பை அடிப்பது போன்றதொரு ஒலி போன்றவையே செம்மார்பு குக்குறுவானை இவருக்குப் பிடித்தமான பறவையாக்கி உள்ளது. பெங்களூரில் இளங்கலை படிக்கும் போது பறவை நோக்குதலில் இவருக்கு ஏற்பட்ட ஆர்வம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்பில் சேர்ந்த பின்னர் பன்மடங்கு அதிகரித்தது. தற்போது வரை பல அரிய பறவைகள் உட்பட 70 பறவை இனங்களை பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் முறைப்படிப் பதிவு செய்துள்ளார். மேலும் தன் பல பல்கலைக்கழக நண்பர்களையும் ஊக்குவித்து பறவை ஆர்வலர்களாக மாற்றியுள்ளார்.

ஏஞ்சலின் மனோ, 20

பிடித்த பறவை: பவளக்கால் உள்ளான்
சேலத்தில் பிடித்த இடம்: பண்ணவாடி, மேட்டூர்.

Ang - Copy

சேலம் அரசு கலைக்கல்லூரியில் படித்து வரும் இவருக்கு பறவைகள் மீது நீண்ட நாட்களாக ஆர்வம் இருந்தது. ஆனாலும், கையில் ஒரு கேமரா கிடைத்ததுமே செயல்பாடுகளை துரிதப்படுத்தியுள்ளார். குறுகிய காலத்தில் நிறைய கற்றுக்கொண்டு ஒளிப்படக்காரராக மட்டுமின்றி பறவை ஆர்வலராகவும் மாறியுள்ளார். தான் எடுக்கும் அனைத்துப் பறவைப் படங்களையும் மக்கள் அறிவியல் தளமான eBirdல் பதிவேற்றமும் செய்கிறார். பவளக்கால் உள்ளானின் அழகிலும் அதன் நடையிலும் இவர் கவரப்பட்டு விட்டார்.

பிரதீபா சுதாகர், 38

பிடித்த பறவை: மாங்குயில் 
சேலத்தில் பிடித்த இடம்: வீடு (சேலம் ஜங்ஷன் அருகில்)

Pradeepa

ஓராண்டுக்கு முன் பறவை நோக்குதலைத் தொடங்கிய இவர் கிருஷ்ணம்புதூர் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியையாகப் பணி புரிகிறார். பறவை நோக்குதலுக்கென்று அதிகம் பயணிக்க இயலாவிட்டாலும் ஆர்வம் மட்டும் குறையவில்லை. நம் சுற்றுப்புறத்தை உற்று நோக்கினாலே நிறைய கற்றுக்கொள்ளலாம் என்று கூறும் இவர், தன் மகன் ஹிமவத் கௌரேஷுடன் இணைந்து வீட்டிலிருந்தே வெளிநாட்டு வலசைப் பறவைகள் உட்பட 50க்கும் மேற்பட்ட பறவையினங்களை பதிவு செய்துள்ளார். தனக்குப் பிடித்தமான மஞ்சள் நிறத்துக்கு எடுத்துக்காட்டாய் திகழும் மாங்குயிலே இவருக்குப் பிடித்தமான பறவையாக உள்ளது. (மாங்குயில் என்று அழைக்கப்பட்டாலும் அது குயில் இனத்தைச் சேர்ந்த பறவை அல்ல)

சுகுணா இராமமூர்த்தி, 56

பிடித்த பறவை: நீலத்தலை பூங்குருவி
சேலத்தில் பிடித்த இடம்: கன்னங்குறிச்சி மூக்கனேரி

RS1

பறவைகளால் மட்டுமே இவர் ஒரு பறவை ஆர்வலர் ஆகிவிடவில்லை. இவருடைய மகன் பல முறை வலியுறுத்தி உள்ளதும் ஒரு காரணம். வயதின் காரணமாக உடல்நிலையில் இடர்பாடுகள் வந்தாலும் வருடத்தின் முக்கியமான பறவைகள் கணக்கெடுப்புகளில் இவர் பங்கு கொள்ளத் தவறியதில்லை. கடைசியாகப் பறவை நோக்குதலுக்குச் சென்று வந்ததில் பார்த்த ஒரு அழகானப் பறவையே இவருக்குப் பிடித்ததாக இருக்கும். ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பிற்காக ஏற்காட்டிற்கு சென்று வந்த போது கண்ட நீலத்தலை பூங்குருவியே தற்போது பிடித்தமான பறவையாக உள்ளது. புதுப்புது இடங்களுக்குச் செல்ல எப்போதும் தயாராகவே இருப்பவர்.

சேலத்தில் இன்னும் நிறைய பெண் பறவை ஆர்வலர்கள் இருப்பினும் மேற்கூறிய ஆறு பெண்கள், பல விதங்களில் தங்களுடைய பங்களிப்பின் வாயிலாக மாவட்டத்திற்கு முன்னோடியாகத் திகழ்கின்றனர். இவர்களைப் போன்று மேலும் பல பெண்கள் பறவைகளோடும் இயற்கையோடும் இணைந்து வாழ்வதற்கு இவர்கள் உத்வேகமாகத் திகழ்வார்கள். 11May_Hindu_Uyir_Moochu