எழுத்து: சு. செந்தில் குமார், தலைமை ஆசிரியர் (மற்றும் பறவை ஆர்வலர்), ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கிருஷ்ணம்புதூர், சேலம்.
சென்ற ஆண்டின் வலசைக்கால இறுதியில் நானும் மற்றொரு பறவை ஆர்வலரும் ஒரு சிறிய புல்வெளிக்குச் சென்று அடுத்த ஆண்டு அங்கே என்னென்ன புதிய பறவைகளைப் பார்க்க இயலும் என்று பேசிக்கொண்டோம். அவர் சில பறவைகளோடு வலசை வரும் அரிய காடை இனங்கள் வருவதற்கும் வாய்ப்புகள் உண்டு என்று கூறினார். எனக்கு “காடை புடிச்சேன், கவுதாரி புடிச்சேன், காக்கா புடிக்க மாட்டேன்,” என்ற திரைப்படப் பாடல் நினைவிற்கு வராமல் இல்லை.
அதன் பின் வழக்கம் போல ஒரு நாள் பறவை நோக்குதலுக்கு அதே பகுதிக்குச் சென்றிருந்தேன். திடீரென்று ஒரு பறவை எனது காலுக்கருகிலிருந்து விர்ரென்று பறந்து ஒரு 15 அடிக்கு அப்பால்போய் இறங்கியது. ஏற்கனவே இது போல அனுபவம் எனக்கு உண்டு. கவுதாரி (Grey Francolin), குறுங்காடை (Barred Buttonquail) போன்றவை திடீர் திடீரென்று பறந்து ஒரு சிறு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். பறவையின் அளவைப் பார்த்து இதுவும் குறுங்காடையாகத் தான் இருக்குமென்று நினைத்தேன். அது கண்ணுக்குத் தெளிவாக தெரியும் தொலைவில் நின்று கொண்டிருந்தது.
கண்டேன் காடையை
ஆனால் அது நான் ஏற்கனவே பார்த்த காடையைப் போல் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. நான் கேமராவில் படம் எடுக்கும் போது நேருக்கு நேர் நின்று என்னைப் பார்ப்பது போல இருந்தது. உடல் முழுவதும் வெளிர் பழுப்பு நிறம். தலை முதல் கழுத்து வரை உள்ள வெள்ளை நிறத்தினூடே கருப்பு வரிகள். தொண்டையிலிருந்து நெஞ்சுப் பகுதி வரை கருப்பு நிறம் இருந்தது. பெண் காடை சற்றே வெளிரிய தோற்றத்துடன் காணப்பட்டது. இக்காடைகள் ஒரு கோழிக்குஞ்சு அளவுக்குத்தான் (18 செ.மீ) இருந்தது. எடை தோராயமாக 75 கிராம் இருக்கலாம். படம் எடுக்க ஒரு நிமிட ஒத்துழைப்பு போதும் என்று நினைத்ததோ என்னவோ பறந்து மறைந்து விட்டது. பின் தொடர்ந்து தேடியும் கிடைக்கவில்லை.
வீட்டிற்கு வந்து எடுத்த படங்களைப் பார்க்கும் போது தான் தெரிந்தது அது RAIN QUAIL Coturnix coromandelica என்று சொல்லப்படும் கருநெஞ்சுக்காடை என்று. eBird இணையத்தில் தேடிய போது அவை தமிழ்நாட்டிற்கு குறைந்த அளவிலே வருகை தருவதை அரிய முடிந்தது.
பரவல், வாழிடம், உணவு & இனப்பெருக்கம்
இந்தியாவில் பத்திற்கும் மேற்பட்ட காடை இனங்கள் வாழ்கின்றன. அதில் நான் பார்த்த கருநெஞ்சுக்காடை (Rain Quail) பெரும்பாலும் ஆசிய கண்டத்தின் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், மியான்மர், கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.
புல்வெளி நிலப்பரப்புகளும் அடர்த்தியில்லா புதர்காடுகளுமே காடைகளின் முக்கிய வாழிடமாகும். பூச்சிகள், விதைகள், தானியங்கள், சிறு கொட்டைகள் போன்றவற்றை உணவாக உட்கொள்கின்றன. இவற்றின் இனப்பெருக்கக் காலமானது மார்ச் முதல் அக்டோபர் வரை ஆகும். பெண் கருநெஞ்சுக் காடை 4 முதல் 6 முட்டைகள் வரை இட்டு 16 முதல் 19 நாட்கள் வரை அடைகாத்து குஞ்சு பொரிக்கும். இக்காடைக்குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவந்து சில நாட்களில் தாமாக உணவு உட்கொண்டாலும் பெற்றோருடன் 8 மாதங்கள் உடனிருந்த பிறகே தன்னிச்சையாக செயல்படத் தொடங்குகிறது.
“விட்-விட்… விட்-விட்…”
சில நாட்கள் கழித்து பெண் காடையை ஒளிப்படம் எடுக்கலாம் என்று மீண்டும் ஒரு முறை சென்றிருந்தேன். நீண்ட நேரத்திற்குப் பிறகு அதனுடைய குரலொலியைக் கேட்டேன். மூன்று முதல் ஐந்து முறை “விட்-விட்… விட்-விட்… விட்-விட்…” என்று ஒலி எழுப்பியது. அவ்வொலியைப் பின்தொடர்ந்து தேடிச் சென்றேன். என்னைப் பார்த்துவிட்டு விர்ரென்று பறந்து இன்னொரு புதருக்குள் சென்று மறைந்தது. கிட்டத்தட்ட அரைமணி நேர முயற்சிக்குப் பின்பும் ஒரு ஒளிப்படம் கூட எடுக்க முடியவில்லை. கண்களுக்குத் தெரிகிறது. பறக்கிறது. ஆனால் ஒரேயொரு படம் மட்டும் எடுக்க முடியவில்லை. ஆனால் அதனுடைய வாழ்க்கை முறையில் உள்ள ஒரு குணாதிசயத்தைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. ஓரிடத்திலிருந்து 150 அடி தூரம் வரை ஒரு பெரிய வட்டம் போட்டால் அந்த இடத்திற்கு அப்பால் அது பறந்து செல்லுவதில்லை. அங்கேயே சுற்றிச்சுற்றி வருகிறது. காடை புடிச்சேன் என்று எப்படி பாட்டு எழுதினார்கள் என்று ஆச்சரியம் கொண்டேன். அதனைப் பிடிப்பதல்ல, பார்ப்பதே கடினமாக இருந்தது.
வலசைப் பண்புகளும் சில பதிவுகளும்
இந்தியாவின் மத்தியப் பகுதிகளில் வாழும் கருநெஞ்சுக்காடை குளிர்காலங்களில் வடகிழக்கு மற்றும் தென்னிந்தியாவை நோக்கி வருகிறது. கோடைகாலங்களில் வடக்கு நோக்கு செல்கிறது. தமிழ்நாட்டிற்கு இக்காடைகள் குறைந்த எண்ணிக்கையிலேயே வருகின்றன. இதுவரை சேலம், கோவை, ஈரோடு, பெரம்பலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, காஞ்சிபுரம் ஆகிய ஒன்பது மாவட்டங்களில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. எனது மாவட்டமான சேலத்தில் பச்சைமலை என்ற பகுதியில் 2011ல் ஒரு பதிவு (Source: eBird) மட்டுமே இருந்தது. எனவே எளிதில் பார்க்கக்கூடிய பறவை அல்ல இது. அப்படிப்பட்ட அரிய பறவையொன்று எனக்குக் காட்சி கொடுத்தது இன்றும் ஒரு அதிசய நிகழ்வாகவே தோன்றுகிறது.