எழுத்து: செந்தில்குமார், தலைமை ஆசிரியர் (மற்றும் பறவை ஆர்வலர்), ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கிருஷ்ணம்புதூர், சேலம்.
ஓரிடவாழ் பறவைகள் கணக்கெடுப்பு நாளின் (மே 4) பட்டியல்கள் மற்றும் படங்களை முழுவதும் eBirdல் பதிவேற்றம் செய்து முடிக்காத நிலையில் அடுத்த நாளே நண்பர் திருமலை வெங்கட்ராமன் அழைத்திருந்தார். பறவை ஆர்வலர், ஒளிப்படக் கலைஞர், எல்லாவற்றிற்கும் மேலாக பழகுவதற்கு இனிமையானவர்.
அவர்: “சார், ஏற்காட்டில் காட்டுப் பஞ்சுருட்டானைப் பார்த்திருக்கிறீர்களா?
நான்: “ஒரேயொரு முறை பார்த்திருக்கிறேன், சார்.”
அவர்: “இப்போ கூடு கட்டி தன்னுடைய குஞ்சுகளுக்கு உணவூட்டிக் கொண்டிருக்கிறது. நீங்கள் சென்றால் பார்க்கலாம்.”
ஒரு சிறந்த பறவையாளர் என்பவர் தான் பெற்ற இன்பத்தை இன்னொருவரும் பெற வேண்டும் என்று ஆற்றுப்படுத்துதல் வேண்டும். அதை அவரிடமும் கண்டேன். எனக்கும் சேலம் மாவட்டத்தில் அரிதாகவே தென்படும் காட்டுப் பஞ்சுருட்டானை மீண்டும் காண வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது.
பரவல் பெரியது; சேலத்தில் அரியது
காட்டுப் பஞ்சுருட்டானின் வாழிடப் பரவல் பெரியது. மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ள கேரளா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும் மற்றும் இமயமலைத் தொடரில் உள்ள இமாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், அருணாச்சல பிரதேசத்திலும் இவை வாழ்கின்றன. இதனைத் தவிர்த்து இந்தியாவின் உள் மாநிலங்களின் மலைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை கோயமுத்தூரில் அதிகம் காணப்படுகின்றன. சேலம் மாவட்டத்தில் உள்ள கிழக்குத்தொடர்ச்சி மலைகளில் அரிதாகவே குறிப்பாக ஏற்காட்டில் தென்படுகிறது.
மண் சுவரில் கூடு
இப்பறவையைக் காண வேண்டும் என்பதற்காக என்னுடன் மேலும் ஐந்து பறவை ஆர்வலர்கள் வந்திருந்தனர்—வடிவுக்கரசி, திவ்யா சுப்ரமணி, ஏஞ்சலின் மனோ, சுப்ரமணிய சிவா மற்றும் கணேஷ்வர். இவ்வாறு சமபாதி இடஒதுக்கீட்டோடு காலை ஆறு மணிக்கு புறப்பட்டு சுமார் ஒன்பது மணி அளவில் வெங்கட்ராமன் சார் சொன்ன இடத்தை வந்தடைந்தோம். எங்கள் முதல் வேலை அவர் சொன்ன இடத்தில் அப்பறவையையும் அதன் கூட்டையும் கண்டுபிடிக்க வேண்டும். அதனுடைய கூடு மற்ற பறவைகளைப் போல சுள்ளிகளாலும் குச்சிகளாலும் கொண்டு கட்டப்படுவதில்லை. மண் சுவரில் துளையிட்டு அதில் மெத்தென புற்களையும் இறகுகளையும் வைத்து முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் ஒரு வித்தியாசமான பறவை. இந்தியாவில் 6 வகையான பஞ்சுருட்டான்கள் உள்ளன. அனைத்துமே மண் சுவரில் துளையிட்டு கூடமைக்கும் பண்புடையவை.
தேடலும் விலகலும்
நாங்கள் சென்ற இடத்திலிருந்த மண் சுவரில் அது போன்று பல துளைகள் காணப்பட்டது. இதில் எந்தத் துளையில் கூடு அமைந்திருக்கிறது என்று தெரியவில்லையே என்று தேடிக்கொண்டிருந்தோம். எந்த அறிகுறியும் இல்லை. சரி நமக்கு வாய்த்தது அவ்வளவுதான் புறப்படலாம் என்று நினைத்த போது தொலைவில் ஒரு காட்டுப் பஞ்சுருட்டான் வாயில் இரையை வைத்து தடுமாறிக்கொண்டிருந்தது. நாங்கள் கூட்டிற்கு மிக அருகில் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து உடனடியாக முடிந்த அளவு தொலைவில் சென்று மறைந்து கொண்டோம். உடனே கூட்டிற்கு வந்து குஞ்சுகளுக்கு உணவூட்டிச் சென்றது. சுமார் இரண்டு மணி நேரம் மறைவில் இருந்து அதன் செயல்பாடுகளை உற்றுநோக்கினோம். 20 நிமிடத்திற்கு ஒரு முறை தாயும் தந்தையும் மாறி மாறி உணவூட்டிச் சென்றன.
அழகியத் தோற்றம்
உடலின் மேற்புறம் முழுவதும் பச்சையிலும் அடிப்பகுதி (underparts) வெளிர் மஞ்சள் நிறத்திலும் நெற்றி, கன்னம், முகம் நீலப்பச்சையிலும் காணப்பட்டது. கழுத்து மற்றும் தொண்டைப் பகுதியில் உள்ள எடுப்பான நீலநிறந்தான் அதற்கு BLUE-BEARDED BEE-EATER எனப் பெயரிடக் காரணம் என்று புரிந்து கொண்டேன். பறவையின் அலகு அரிவாள் போல வளைந்து கூர்மையாக காணப்பட்டது. இந்தியாவில் வசிக்கும் பஞ்சுருட்டான்களில் அளவில் பெரியது இதுவேயாகும். பறவையின் அளவு (size) ஒரு அடிக்கு கொஞ்சம் அதிகமாக இருக்கும். எடையோ 100 கிராமிற்கும் குறைவு தான். இப்படி பல நிறங்கள் மின்ன பெற்றோர் குஞ்சுகளுக்கு மீண்டும் உணவளிக்க இரை தேடிச் சென்றனர்.
உள்ளூர்ப் பறவைகளின் இனப்பெருக்கக் காலம்
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை அதனுடைய இனப்பெருக்க காலம் எனலாம். இதுவே பெரும்பாலான உள்ளூர் பறவைகளுக்கும் (resident species) இனப்பெருக்க காலமாக இருக்கிறது. இந்த ஆண்டில் நான் பார்த்தவரையில் பிப்ரவரி மாதத்தில் பண்ணவாடியில் சாம்பல்தலை வானம்பாடி (Ashy-crowned Sparrow-Lark) குஞ்சுகளுக்கு உணவூட்டுவதையும், வயல் நெட்டைக்காலி (Paddyfield Pipit) கூடு அமைப்பதற்கு பிஸியாக இருப்பதையும் கண்டேன். ஏப்ரலில் தவிட்டுக்குருவி (Yellow-billed Babbler) கூட்டில் அடைகாப்பதைப் பார்த்தேன். மே மாதம் மேட்டூரில் 60க்கும் மேற்பட்ட இராக்கொக்குகள் (Black-crowned Night Heron) கூடுகள் அமைத்து அடைகாப்பதையும், தாரமங்கலத்தில் வெண்முதுகுச் சில்லை (White-rumped Munia) கூடு கட்டிக்கொண்டிருப்பதையும், ஏற்காட்டில் செம்மீசை சின்னான் (Red-whiskered Bulbul), தெற்கத்தி மின்சிட்டு (Orange Minivet) கூடமைக்க மரத்திலிருந்து நாரை உரித்தெடுத்து கொண்டு செல்வதையும், துடுப்புவால் கரிச்சான் (Greater Racket-tailed Drongo) அடைகாப்பதையும், வெள்ளோட்டில் தாழைக்கோழி (Common Moorhen) அடையில் இருப்பதையும் பார்த்து மகிழ்ந்தேன். பொதுவாக பெரும்பாலான இந்தியப் பறவைகளுக்கு இது இனப்பெருக்க காலம் என்றே நினைக்கிறேன்.
நிறைவான நினைவு
காட்டுப் பஞ்சுருட்டானும் இக்காலத்திலேயே இனப்பெருக்கம் செய்கிறது. ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே சுவரில் துளையிட்டு கூடமைக்கும் வேலையை ஆரம்பிக்கும். நான்கு முட்டைகளை இடும். குஞ்சுகளுக்கு தேனீக்கள் உட்பட பல பூச்சிகளை உணவாக அளிக்கும். மாலை இருள் சூழும் வேளையிலும் உணவூட்டுவதைப் பார்த்துள்ளேன். ஆள் நடமாட்டம் இருந்தால் உணவளிக்க தயங்குவதும் அதுவே கூட்டின் அருகில் இரண்டடி இடைவெளியில் கார்கள் கடந்து சென்றாலும் கூட சிறிதும் பயமின்றி குஞ்சுகளுக்கு உணவளிக்கிறது. பின்னர் ஒரு மாதம் கழித்து மீண்டும் இக்குடும்பத்தைப் பார்க்கச் சென்றேன். ஆனால் அங்கு பெற்றோரோ குஞ்சுகளோ இல்லை. அனைவரும் நன்முறையில் வளர்ந்து பறந்திருக்க வேண்டும்.
கூட்டின் அளவுகள்
பிறகு தரையிலிருந்து பொந்தின் உயரத்தை அளந்து பார்த்தேன். சுமார் 6.5 அடி (198 செ.மீ) உயரத்தில் அமைந்திருந்தது. மண் சுவரில் உள்ள பொந்தின் விட்டம் 11 செ.மீ இருந்தது. உள்ளே செல்லச்செல்ல விட்டம் குறைந்தது. பொந்தின் உள் ஆழம் ஏறத்தாழ 4 அடி (116 செ.மீ) இருந்தது. நான் அளந்த இதே கூட்டில் தான் ஒரு மாதத்திற்கு முன்பு காட்டுப் பஞ்சுருட்டான் தன் குஞ்சுகளுக்கு உணவூட்டுவதைக் காணும் அரிய வாய்ப்பு கிடைத்ததை எண்ணி உள்ளம் பூரிப்படைந்தது.
நீங்களும் எங்களோடு வாருங்களேன்; சேலத்தில் ஏற்காட்டில் மட்டும் அரிதாக காணப்படும் இப்பறவையின் அழகையும் சேர்த்து இன்னும் பல பறவைகளையும் கண்டு ரசிக்கலாம்!