நாம் ஒரு காட்டுப் பாதையைக் கடக்கும் போதோ அல்லது சுற்றுலாவிற்கு மலைப் பிரதேசங்களுக்கு செல்லும் போதும் “குக்…குக்…குக்…” அல்லது “குர்ர்ர்…ர்ர்ர் குட்ரூக்…குட்ரூ…குட்ரூ” போன்ற ஒலிகளை கேட்டிருக்கக் கூடும். ஒரே சீராகவும் தொடர்ந்து நீண்ட நேரத்திற்கும் ஒலித்துக்கொண்டே இருக்கிறதே என்னவாக இருக்கும் என்று யோசித்திருக்கலாம். அது தமிழ்நாட்டில் காணப்படும் நான்கு குக்குறுவான் இனங்களில் ஏதோ ஒன்றின் குரலாக இருந்திருக்கலாம். உலகில் 75 குக்குறுவான் இனங்கள் காணப்படுகின்றன. அதில் இந்தியாவில் உள்ள 9 இனங்களில் 4 வகைப் பறவைகள் தமிழ்நாட்டில் வசிக்கின்றன.
குக்குறுவான்களின் பொதுப் பண்புகள்
குக்குறுவான்கள் எடுப்பான பச்சை நிற உடலைக் கொண்டிருந்தாலும் இலைகளின் நிறத்தை ஒத்திருப்பதால் பார்ப்பது சற்று கடினம். தடிமனான அலகைக் கொண்டிருக்கும். இவற்றை மர உச்சிகளில் பார்க்க இயலும். அத்திப் பழங்களை விரும்பி உண்ணும் பழந்தின்னிகளான இவை சில வேளைகளில் கரையான்கள், பூச்சிகள் போன்றவற்றையும் உண்ணும். இனப்பெருக்கக் காலங்களின் போது நாள் முழுவதும் கூட ஒலி எழுப்பிக் கொண்டே இருக்கும். பழைய மரங்களில் பொந்து குடைந்து முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். ஆண், பெண் என இரண்டு பறவைகளும் அனைத்து குடும்பப் பொறுப்புகளையும் கவனித்துக் கொள்ளும்.
பழுப்புத்தலை குக்குறுவான் (Brown-headed Barbet)
இந்தியத் துணைக்கண்டத்தில் பரவி இருக்கும் இப்பறவை தமிழ்நாட்டின் மிகப்பெரிய குக்குறுவான் இனமாகும். தலையும் கழுத்தும் பழுப்பு நிறத்திலும் மார்பில் சீரான வெண்ணிற வரிகளுடன் காணப்படும். வாலின் அடி இறகுகளில் சிறிது நீல நிறம் இருக்கும். கண்களைச் சுற்றியுள்ள எடுப்பான ஆரஞ்சு நிற தோல் பகுதியானது மேல் அலகின் அடிப்பகுதி வரை காணப்படும். இவற்றின் குரலும் வெண்கன்ன குக்குறுவானின் குரலும் நம்மை குழப்பமடையச் செய்தாலும் அதில் வேறுபாடு உள்ளது. வெண்கன்ன குக்குறுவான்களைப் போல் அல்லாமல் இவை மலையடிவாரங்களின் வறண்ட பகுதிகளிலும் வசிக்கும்.
வெண்கன்ன குக்குறுவான் (White-cheeked Barbet)
பார்ப்பதற்கு பழுப்புத் தலை குக்குறுவானைப் போல் இருந்தாலும் இவற்றின் கன்னங்களில் உள்ள எடுப்பான வெண்ணிறப் பட்டையை வைத்து எளிதில் அடையாளம் காணலாம். இவற்றின் தலை அடர் பழுப்பு நிறத்திலும் மார்பில் வெள்ளைக் கோடுகளும் தென்படும். வெண்கன்ன குக்குறுவான் ஒரு ஓரிடவாழ்வி. இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைகளிலும் தமிழகத்தின் சில மலைகளிலும் மட்டுமே காணக் கூடிய இப்பறவையை உலகில் வேறு எங்கும் காண இயலாது. இவை பசுமைமாறாக் காடுகளிலும் மலைகளின் ஈரப்பதமான குறுங்காடுகளில் வசிக்கும். ஜோடியாகவும் சில வேளைகளில் சிறு கூட்டமாகவும் வாழும் இவை காடுகளை ஒட்டியுள்ள நம் தோட்டங்களுக்கும் தோப்புகளுக்கும் வந்து செல்லும்.
செம்மார்பு குக்குறுவான் (Coppersmith Barbet)
குருவியை விட சற்று பெரிதான இப்பறவையின் அலகு கருப்பு நிறத்தில் இருக்கும். இவற்றின் நெத்தியும் மார்பும் சிவப்பு நிறத்திலும் தொண்டையும் கண்ணைச் சுற்றியுள்ள பகுதி மஞ்சள் நிறத்திலும் இருக்கும். இந்தியத் துணைக்கண்டம் முதல் சில தெற்காசிய நாடுகள் வரை பரவலாகத் தென்படும் இக்குக்குறுவான் பழமரங்கள் உள்ள நகர்ப்புறங்களிலும் வசிக்கும். கொல்லன் சுத்தியைக் கொண்டு உலோகத்தை அடிக்கும் போது ஏற்படும் “டுக்…டுக்…டுக்” சத்தத்தைப் போல இவற்றின் குரலும் ஒத்திருப்பதே இப்பறவையின் ஆங்கிலப் பெயர்க் காரணம் (Coppersmith Barbet). இவை காலை வேளைகளில் மர உச்சிகளில் அமர்ந்து குளிர் காய விரும்பும்.
மலபார் குக்குறுவான் (Malabar Barbet)
மலபார் குக்குறுவான் உலகிலேயே நம்முடைய மேற்குத்தொடர்ச்சி மலைகளில் மட்டுமே வாழும் ஓரிடவாழ்வி ஆகும். பார்ப்பதற்கு செம்மார்பு குக்குறுவானைப் போல் இருந்தாலும் இப்பறவைகளின் நெத்தியும் கன்னங்களும் தொண்டையும் மார்பும் முழுவதுமாக சிவப்பு நிறத்தில் இருக்கும். கன்னத்திற்கு பின் ஒரு கரு நிற பட்டையும் அதனை ஒட்டி ஒரு நீல நிறப் பட்டையும் காணப்படும். பசுமைமாறாக் காடுகளை விரும்பும் இவற்றின் குரல் செம்மார்பு குக்குறுவானை ஒத்திருந்தாலும் குரலில் வேகம் கூட்டி எழுப்பப்படுவதை வைத்து வேறுபாட்டை அறியலாம். அத்திப்பழங்களை உண்ணச் செல்லும் போது சில நேரங்களில் இவை பச்சைப் புறாக்கள் மற்றும் மைனாக்களோடும் இணைந்து கொள்ளும்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சிறுவர்களுக்காக வெளியிடும் “துளிர்,” அறிவியல் மாத இதழில் ஜூலை 2017 பிரசுரமானக் கட்டுரையின் முழு வடிவம். எழுத்து: சு.வே. கணேஷ்வர்.