கார்த்திக். வி. எஸ், இயந்திரப் பொறியாளர், பறவை ஆர்வலர் & ஒளிப்படக் கலைஞர், சேலம்.
ஏற்காட்டில் கடந்த ஆறு மாதங்களாக அல்ல, ஒரு வருடத்திற்கும் மேலாகவே என் தேடலை மேற்கொண்டிருந்தேன். ஆனால் என் கண்ணில் மட்டும் படவே இல்லை. நான் தேடிக்கொண்டிருந்த காட்டுப் பஞ்சுருட்டான் (Blue-bearded Bee-eater) இங்கு தான் உள்ளதென்று கூறுகிறார்கள். ஏற்காடு அடிவாரம் தொடங்கி, கொட்டச்சேடு, குப்பனூர் வரை தனியாக பல முறை சென்று தேடி விட்டேன். ஆனால் கிடைக்கவே இல்லை. ஒரு கட்டத்தில் சரி இனிமேல் வரும்போது வரட்டும் என்ற விரக்தியில் விட்டுவிட்டேன். ஆனால் ஒவ்வொரு முறை இதைத் தேடும் போதும் சில புதிய பறவைகள் கிடைக்கும்.
விருந்தினரைச் சந்தித்தோம்
மேட்டூர் பகுதிக்கு ஐரோப்பியப் பஞ்சுருட்டான் (European Bee-eater) வந்துள்ளது என்ற செய்தி அறிந்து அங்கு செல்லலாம் என்று திட்டமிட்டேன். இதை என் நண்பர் ஒருவரிடம் தெரிவித்த போது அவரும் என்னோடு வருவதாகச் சொன்னார். உங்களுடன் சும்மா சுற்றுகிறேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள் எப்படிச் செய்கிறீர்கள் என்று பார்க்கத்தான் வருகிறேன். பறவைகளுக்காக அல்ல என்று கூறினார். நான் செய்வதைப் பார்த்து… என்ன சொல்வது அவருக்கும் இந்தப் பறவைப் பார்த்தல் நோய் தொற்றிக்கொண்டது. தற்போது வேலூரில் அவர் வீட்டருகே பறவைகளை இரசித்து மகிழத் தொடங்கிவிட்டார். இன்னும் நிறைய பறவைகளைக் காண வேண்டும் என்ற எண்ணம் அவருள் பதிந்துவிட்டது.
வெளிநாட்டில் இருந்து வலசை வரும் ஐரோப்பியப் பஞ்சுருட்டான் மேட்டூரில் எங்கு இருக்கும் என்பதை eBird India வழியாக பார்த்துவிட்டுச் சென்றோம். குறிப்பிட்ட இடத்தை அறிய யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. அணையை ஒட்டித் தேடினால் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஏனெனில் பஞ்சுருட்டான்கள் பறக்கும் விதத்தையும் அதனுடைய சில பண்புகளையும் தெரிந்து வைத்திருந்தேன். உயரத்தில் இருந்த சில மின்கம்பிகளின் அருகே பறந்து கொண்டிருந்தன. அருகில் சென்று பார்த்தபோது அவை ஐரோப்பியப் பஞ்சுருட்டான்கள் என்பது உறுதியானது. மேலும் அருகில் சென்று காண்பதற்கு சில இடங்களில் தேடினோம். அப்போது பன்னிரண்டு பறவைகள் வரை தென்பட்டன.
(அன்று ஐரோப்பியப் பஞ்சுருட்டானோடு சேர்த்து மேலும் பல பறவைகளைக் கண்டோம். அப்பட்டியலைக் காண இங்கே சொடுக்கவும்.)
காட்டுப் பஞ்சுருட்டானின் அற்புதக் காட்சி
நான் ஏற்காடு முழுவதும் காட்டுப் பஞ்சுருட்டானைத் தேடினேன். ஆனால் எனக்கு சீக்கிரமாக கிடைத்ததோ ஐரோப்பியப் பஞ்சுருட்டான். அதன் பிறகு எவ்வித எதிர்ப்பார்ப்பும் இன்றி மீண்டும் ஏற்காட்டிற்கு பயணத்தைத் துவங்கினேன்.
ஐரோப்பியப் பஞ்சுருட்டானைப் பார்த்த அடுத்த இரண்டாவது வாரம், நான் சற்றும் எதிர்ப்பாராத நேரமாக என் முன்னே வந்து அமர்ந்தது. ஏற்காடு செல்லும் பாதையில் நாற்பதடி பாலம் உள்ளதல்லவா அங்கு தான். காட்டுப் பஞ்சுருட்டானின் காட்சி கிடைத்த அந்தத் தருணம் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஒருசேர அளித்தது. அப்படி எதிர்ப்பாராத நேரத்தில் நாம் விரும்பிய ஒரு பறவை கண் முன்னே வந்து நிற்பது அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கும். பார்த்துவிட்டு எனக்குத் தலை கால் புரியவில்லை. கேமராவில் படம் எடுப்பதற்கு சரியான செட்டிங் வைக்க முடியவில்லை. ஏனெனில் எதிர் திசையில் சூரியன் இருந்தது. இருப்பினும் ISOவை அதிக அளவில் வைத்து படங்கள் எடுத்து விட்டேன். என் கண் முன்னே வந்து தரிசனம் தந்ததே எனக்கு மனநிறைவைக் கொடுத்தது.
(அன்று காட்டுப் பஞ்சுருட்டானோடு சேர்த்து மேலும் பல பறவைகளைக் கண்டேன். அப்பட்டியலைக் காண இங்கே சொடுக்கவும்.)
நாம் எதையும் மிகவும் எதிர்ப்பார்த்து செல்லக்கூடாது. பறவைப் பார்த்தல் என்பது ஒரு தியான நிலை போன்றது. இயற்கை நம்மிடம் நன்றாகவே விளையாடும். எதை எப்போது நம் கண்ணிற்கு காட்ட வேண்டும் என்று அதற்குத் தெரியும். அந்தத் தருணங்கள் நமக்குக் கிடைக்க தொடர்ந்து பயணிக்க வேண்டும்.