சில பறவை ஆர்வலர்களுக்கு காணக்கிடைக்காத அழகானப் பறவைகளைக் காண்பது வாழ்நாளின் முக்கிய இலட்சியமாக இருக்கும். மற்ற சிலர் இந்த ஆண்டு குறிப்பிட்ட ஒரு பறவையைக் காண வேண்டும் என்பதற்காக பெரும் முயற்சிகள் மேற்கொள்வர். பறவைப் பார்த்தலின் போது கிடைக்கும் சொல்லுதற்கரிய பேரானந்தத்திற்காக மட்டுமே பறவைகளை விரும்பி நோக்குவோரும் பலர் உண்டு. வேறு சிலருக்கு பறவைகள் என்றால் அதீத விருப்பமாக இருக்கும் ஆனால் பறவை நோக்குதலில் எல்லாம் ஈடுபட்டிருக்க மாட்டார்கள். இவர்கள் அனைவரின் வாழ்விலும் இடம்பெறும் பறவை நோக்குதல் நிகழ்வுகளுள் வருடத்தின் மிக முக்கிய நிகழ்ச்சியான சர்வதேச ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (Great Backyard Bird Count) இந்த ஆண்டும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.
இந்த மாபெரும் கணக்கெடுப்புத் திருவிழாவில் உலகம் முழுவதும் உள்ள ஆர்வலர்கள் பறவைகளைக் காக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் அவற்றைக் கணக்கெடுக்க தம்மால் ஆன முயற்சிகளை மேற்கொள்வர். பறவை ஆர்வலர்களுக்கு இது ஒரு மாரத்தான் ஓட்டத்தைப் போல. ஆனால் இதில் போட்டி கிடையாது. இக்கணக்கெடுப்பை தேசிய அளவில் Bird Count India ஒருங்கிணைக்கிறது.
ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு (GREAT BACKYARD BIRD COUNT) என்றால் என்ன?
நம் வீடு முதல் தினசரி நாம் சென்று வரும் இடங்கள் வரை ஏதேனும் சில பறவைகளை தற்செயலாகவாவது பார்த்திருப்போம். நமக்கும் அதற்கும் தொடர்பு இல்லை என்று நாம் நினைத்தாலும் உண்மையில் நிறையவே தொடர்பு உண்டு. அப்படி நம் சுற்றுப்புறங்களில் பார்க்கும் பொதுப்பறவைகளை கணக்கிடுவதே GREAT BACKYARD BIRD COUNT (GBBC) என்னும் ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு ஆகும். இது உலகம் முழுவதும் ஒரே வேளையில் நடைபெறும் மாபெரும் திருவிழா.
வளாகப் பறவைகள் கணக்கெடுப்பு (CAMPUS BIRD COUNT) என்றால் என்ன?
ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பையே ஒரு வளாகத்திற்குள் இருந்து மேற்கொள்வது தான் வளாகப் பறவைகள் கணக்கெடுப்பு. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பிற நிறுவனங்களில் பணி புரிவோர் தாங்கள் இருக்கும் வளாகத்திற்கு வந்து செல்லும் பறவைகளைக் கணக்கெடுக்க ஓர் வாய்ப்பு இது. இதன் வாயிலாக குறிப்பிட்ட ஒரு இடத்தின் சூழல் தன்மையினை அறியலாம்.
இதை ஏன் செய்ய வேண்டும்?
பறவைகள் சூழியல் சுட்டிக்காட்டிகள். இந்தியாவின் பறவை மனிதர் சாலிம் அலி, பறவைகள் இல்லையென்றால் இந்த உலகம் 15 அடி வரை வெறும் பூச்சிகளால் நிரம்பும் என்று குறிப்பிட்டுள்ளார். மதுசூதன் கட்டி என்ற மற்றொரு ஆராய்ச்சியாளர் தன் ஆய்வில், ஒரு கதிர்க்குருவி ஒரு நிமிடத்திற்கு மூன்று பூச்சிகள் வரை உண்ணும் என்றும், கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு நாளில் ஒரே ஒரு சிறிய கதிர்க்குருவி மட்டும் சுமார் 2000 பூச்சிகள் வரை உண்கிறது என்று கண்டுபிடித்துள்ளார்! இது விவசாயத்திற்கு பேருதவியாக இருக்கும். எனவே இது போன்ற பல உதவிகளைப் பறவைகளும் பிற உயிர்களும் நமக்கு இலவசமாகச் செய்கின்றன. அவற்றின் தினசரி செயல்பாடுகளால் நமக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது. மனிதர்களின்றி பறவைகள் வாழும். ஆனால் பறவை போன்ற உயிரினங்கள் இல்லாமல் மனித இனம் வாழ முடியாது.
உலகம் முழுக்க உள்ள அனைத்துப் பறவைகளையும் ஒரே நேரத்தில் கணக்கிடுவதால் அவற்றின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை ஆண்டுதோறும் எளிதாகக் கண்டுபிடிக்க இயலும். இது போன்ற நீண்ட காலத் திட்டங்களின் முடிவுகள் பறவைகளின் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது. இந்த ஆராய்ச்சி முடிவுகளுக்கு ஏற்றவாறு உயிரினங்களின் வாழிடங்களுக்கு ஏற்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க இயலும். எனவே இந்தக் கணக்கெடுப்பில் நம்முடைய பங்களிப்பும் முக்கியமான ஒன்றாகும்.
மக்கள் அறிவியல் (CITIZEN SCIENCE)
இது போன்ற உலகம் தழுவிய கணக்கெடுப்பை சில ஆராய்ச்சியாளர்களாலோ, விஞ்ஞானிகளாலோ நடத்துவதென்பது இயலாத காரியம். ஆகவே தன்னார்வமுள்ள, இயற்கை பாதுகாப்பில் நாட்டமுள்ள பொதுமக்களின் உதவியும் அவசியம். இதுபோன்ற அறிவியல் துறைகளில் பொதுமக்களின் பங்களிப்பில் நடைபெறும் திட்டங்களை மக்கள் அறிவியல் (citizen science) என்பர்.
மக்கள் விஞ்ஞானி (CITIZEN SCIENTIST)
இந்தியாவில் இது போன்று சிட்டுக்குருவியின் எண்ணிக்கையை கணக்கெடுத்தல் 2012ல் நடைபெற்றது. சிட்டுக்குருவிகளோ மற்ற பறவைகளோ செல்போன் கதிர்வீச்சினால் பாதிக்கப்படுகின்றன என்பது தவறான தகவலாகும். இது அறிவியல் பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை. பெருநகரங்களில் குறைந்து வந்தாலும் மற்ற இடங்களில் நல்ல எண்ணிகையில் பரவி உள்ளது. இந்தியாவில் சிட்டுக்குருவிகளின் பரவல் மற்றும் பிற தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்.
மேலும் SeasonWatch (www.seasonwatch.in) எனும் திட்டம் பல்வகையான மரங்கள் பூப்பூக்கும், காய்க்கும் வேளைகளை பதிவு செய்கிறது. தற்போது நடைபெறவுள்ளது சர்வதேச ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (GBBC). இது போன்ற மக்கள் அறிவியல் திட்டங்களுக்குப் பங்களிக்கும் ஒவ்வொருவரும் மக்கள் விஞ்ஞானி (citizen scientist) ஆவர்.
இந்தக் கணக்கெடுப்பு எப்போது நடைபெறுகிறது?
வருடந்தோறும் இந்தக் கணக்கெடுப்பு பிப்ரவரி மாதம் நடைபெறும். இந்த ஆண்டு (2020), பிப்ரவரி 14 முதல் 17 வரை நான்கு நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்தக் கணக்கெடுப்பு இல்லாமல் வருடம் முழுவதும் நாம் விரும்பும் நேரத்திலும் பறவைகளைக் கணக்கிடலாம்.
எந்த நேரத்தில் பறவைகளைக் கணக்கெடுக்க வேண்டும்?
குறிப்பிட்ட நேரம் எதுவும் இல்லை. நாம் விரும்பிய நேரத்தில் செய்யலாம். காலை எழுந்தவுடன், வேலைக்குச் செல்லும் போது, மதிய உணவு இடைவேளையில், மாலையில் வீட்டிற்கு வந்து தேநீர் பருகும் போது, ஏன் நள்ளிரவிலும் கூட செய்யலாம்.
எவ்வளவு நேரம் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும்?
குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது ஓர் இடத்தில் இருந்து பறவைகளைக் கணக்கிட வேண்டும். அதற்கும் அதிகமாக நமக்கு நேரம் இருந்தால் தாராளமாகத் தொடரலாம்.
எங்கிருந்து பறவைகளைக் கணக்கிட வேண்டும்?
நம் வீடுகளில் இருந்தோ, பள்ளி, கல்லூரி பிற நிறுவனங்களின் வாளாகத்திலிருந்தோ, பூங்கா, ஏரிகள், குளங்கள் போன்ற பொது இடங்களில் இருந்தோ நாம் பார்க்கும் பறவை இனங்களையும் அவற்றின் எண்ணிக்கையையும் குறித்துக் கொள்ள வேண்டும்.
ஒரு நாளைக்கு எத்தனை முறை செய்ய வேண்டும்?
உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் செய்யலாம். உதாரணத்திற்கு காலை வீட்டிலிருந்து புறப்படும் முன்னர் 15 நிமிடங்கள் கணக்கிட்டுவிட்டுச் செல்கிறேன். மீண்டும் மாலை வீட்டிற்கு வந்ததும் நேரமிருந்தால் செய்யலாம். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் அதிக நேரம் நமக்குக் கிடைக்கும்.
இதில் பங்கு கொள்ள என்ன தகுதி வேண்டும்?
ஆர்வமும் இயற்கை மற்றும் பறவைகளைப் பாதுகாக்கும் எண்ணமும் யாருக்கு இருந்தாலும் அவர்கள் அனைவரும் பங்கு கொள்ளலாம்.
கணக்கெடுப்பிற்கு என்னென்ன உபகரணங்கள் தேவைப்படும்?
இந்த கணக்கெடுப்பிற்காக மட்டுமல்ல நாம் எப்போது பறவைகளைப் பார்க்கத் தயாரானாலும் முதலில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது ஒரு சிறிய நோட்டும் பேனாவும். பைனாகுலர் இருந்தால் நல்லது. இல்லையென்றால் எக்கவலையும் வேண்டாம். பறவைகளைப் பார்க்க கண்களும் காதுகளும் ஆர்வமும் இருந்தால் போதும்.
இந்தக் கணக்கெடுப்பை எப்படிச் செய்ய வேண்டும்?
இக்கணக்கெடுப்பிற்கு மக்கள் விஞ்ஞானியான நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்: நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் எடுத்துக் கொண்டு முதலில் இடம், தேதி, துவங்கும் நேரம், முடிக்கும் நேரம் ஆகியவற்றை எழுதிக்கொள்ள வேண்டும். நாம் துவங்கிய நேரத்தில் இருந்து குறைந்தபட்சம் 15 நிமிடங்களில் என்னென்ன பறவை இனங்கள் எத்தனைப் பார்க்கிறோம் என்பதைக் குறித்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டு:
இடம்: கோர்ட் ரோடு, மணக்காடு, சேலம். தேதி: 15 பிப்ரவரி 2020.
துவங்கிய நேரம்: காலை 7 மணி.
முறை: பயணித்துக்கொண்டு (அ) ஓரிடத்தில் நின்றுகொண்டு.
பார்த்த பறவைகள் மற்றும் எண்ணிக்கை: காகம் – 10, அண்டங்காக்கை – 3, மைனா – 5, கிளி – 1, புறா – 15. மரங்கொத்தி – 1 (பெரிய பறவைக் கூட்டங்களை எண்ணுவது எளிதல்ல. இருப்பினும் உங்காளால் முடிந்த வரை கணிக்கவும்.)
முடித்த நேரம்: காலை 07.20 (மொத்தம் 20 நிமிடங்கள்) இந்த அனைத்துத் தகவல்களும் அடங்கியக் குறிப்பை ஒரு பறவைப் பட்டியல் (checklist) என்று அழைக்கிறோம்.
நீங்கள் ஒவ்வொரு நாளும் (14-17 பிப்ரவரி, 2020) கணக்கிட்டு எழுதி வைத்திருக்கும் பட்டியல், ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் பறவைகளைப் பார்த்து கணக்கிட்ட பட்டியல் மற்றும் ஒரு நாளில், ஒரே இடத்திலிருந்து, வெவ்வேறு நேரங்களில் பறவைகளைப் பார்த்து கணக்கிட்டு எழுதி வைத்திருக்கும் பறவை பட்டியல் (அல்லது பட்டியல்களை) eBird இணையதளத்தில் சமர்ப்பிக்கவும்.
eBirdல் (www.ebird.org/india) பறவைப் பட்டியல்களை எவ்வாறு உள்ளீடு செய்வது?
ஒரு வேளை eBird இணையத்தில் நீங்கள் பதிவு செய்யாமல் இருந்தால் உடனே உங்களது பெயரிலோ அல்லது உங்களது நிறுவனத்தின் பெயரிலோ அல்லது குழுவின் பெயரிலோ பதிவு செய்து கொள்ளுங்கள். பிறகு நம்மிடம் இருக்கும் பறவைப் பட்டியல்களை சமர்ப்பிக்க வேண்டும். இது மிக மிக எளிது. ஒரு புதிய eBird கணக்கைத் தொடங்கி பறவைப் பட்டியல்களை எவ்வாறு சமர்ப்பிக்க வேண்டும் என்பதற்கான சிறிய விளக்கத்தை இந்த உரலியில் காணலாம்: https://drive.google.com/file/d/0B2Bn6VQ-cccYWU5oZzBmUWhrM1U/view
பார்க்கும் புதிய, பெயர்த் தெரியாதப் பறவையின் பெயரைக் கண்டுபிடிக்க கையேடு அல்லது புத்தகம் ஏதேனும் உள்ளதா?
க்ரியா பதிப்பகம் பிரசுரித்துள்ள ப. ஜெகநாதன் & ஆசை எழுதிய 88 பறவைகளின் வண்ணப்படங்கள் கூடிய “பறவைகள்: ஓர் அறிமுகக் கையேடு” என்னும் புத்தகத்தையோ அல்லது Early Bird வெளியிட்டுள்ள 138 பறவைகளை உள்ளடக்கிய “தமிழகப் பறவைகள்” என்னும் குறுங்கையேட்டையோ வாங்கலாம் (www.early-bird.in). ஆங்கிலத்தில் ரிச்சர்ட் கிரிம்மெட், டிம் இன்ஸ்கிப் மற்றும் கரோல் இன்ஸ்கிப் எழுதிய 1,375 பறவைகளைக் கொண்ட Birds of the Indian Subcontinent (Second edition) என்ற புத்தகத்தையும் வாங்கலாம்.
மேலும் இது போன்ற சூழியல் நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கிப் பயன்பெற: crownest.in. தமிழில் கட்டுரைகளைப் படிக்க ஆராய்ச்சியாளர் ப.ஜெகநாதன் எழுதுகிற உயிரி வலைப்பதிவைக் காணுங்கள் (GBBC குறித்த இக்கட்டுரைக்கான சில குறிப்புகளும் அதிலிருந்து பெறப்பட்டுள்ளன).
பள்ளி, கல்லூரிகள், நிறுவனங்கள் முன்பதிவு செய்ய வேண்டுமா?
இந்தியாவில் இக்கணக்கெடுப்பில் பங்கு கொள்ளும் அனைத்து நிறுவனங்களும் இலவசமாக தங்கள் பள்ளி/கல்லூரி/நிறுவனத்தின் பெயரை இந்தியப் பறவைகள் கணக்கெடுப்புக் குழுமத்தின் வலைதளத்தில் https://birdcount.in/event/gbbc2020/ இலவசமாகப் பதிவு செய்யலாம்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கீழ் செயல்படும் துளிர் இல்லங்களையும் பதிவு செய்யலாம். துளிர் இல்லம் மூலம் நீங்கள் கணக்கெடுப்பு நடத்தினால் eBirdல் உங்கள் துளிர் இல்லத்தின் பெயரிலேயே புதிய கணக்கைத் துவங்கலாம் (எ.கா: TNSF Salim Ali Thulir Illam).
பங்கு கொள்வோருக்கு சான்றிதழ் வழங்கப்படுமா?
நான்கு நாள் கணக்கெடுப்பு முடியும் தருவாயில் www.gbbc.birdcount.org என்ற வலைதளத்தில் சர்வதேச சான்றிதழ் ஒன்று வெளியிடப்படும். அதை நாம் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கணக்கெடுப்புத் திருவிழாவிற்கு நீங்கள் தயாரா?
இயற்கையின் மீதும் பறவைகளின் மீதும் கரிசனம் கொண்ட நீங்கள் செய்யப்போகும் இந்த மகத்தான பணியினை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பரிந்துரைத்து அவர்களையும் பங்குபெறச் சொல்லுங்கள்!
மேலும் விவரங்களுக்கும், உங்கள் பள்ளி/கல்லூரி/நிறுவனத்தைப் பதிவுவிட்டு கணக்கெடுப்புகள் செய்யவும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தவும், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் சேலம் பறவையியல் கழகத்தை தொடர்பு கொள்ளவும்: [email protected] or +91-9361313312.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சிறுவர்களுக்காக வெளியிடும் “துளிர்,” அறிவியல் மாத இதழில் பிப்ரவரி 2018 பிரசுரமானக் கட்டுரையின் முழு வடிவம். எழுத்து: சு.வே. கணேஷ்வர்.