எழுத்து: செந்தில் குமார், தலைமை ஆசிரியர் (மற்றும் பறவை ஆர்வலர்), ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கிருஷ்ணம்புதூர், சேலம்.
சனிக்கிழமை எனக்கு விடுமுறை. என் மகனுக்கு பள்ளி வேலைநாள். காலை எட்டு மணிக்கு அவனை பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டுக் கிளம்பும் போது, சரி இன்றும் பவளத்தானூர் ஏரிக்குச் செல்லலாமே என்ற உந்துதல் ஏற்பட, வண்டி ஏரியை நோக்கிச் சென்றது.
வற்றாத ஏரியின் ரகசியம்
எங்கள் ஏரியைப் பற்றி சொல்லியேத் தீர வேண்டும். சேலம் தாரமங்கலத்திலிருந்து முக்கால் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எக்காலத்திலும் அந்த ஏரி வற்றியதாக வரலாறு கிடையாது. பெரிய பெரிய ஏரிகள் வறண்டாலும் எங்கள் ஏரியில் நிச்சயம் கொஞ்சம் நீராவது தேங்கிக்கொண்டு தான் இருக்கும். அதற்கு முக்கியக் காரணம் அங்கு நிலவும் நீர்வளம் அல்ல. தாரமங்கலம் பகுதியின் கழிவுநீர் அனைத்தும் சென்று சேரும் ஒரே இடம் அந்த ஏரி தான். கழிவுநீர் சென்று சேரவில்லை என்றால் பவளத்தானூர் ஏரி எப்பொழுதும் வறண்ட நிலம் தான்.
பாம்புத்தாராவின் தரிசனம்
இருப்பினும் இவ்வளவு அசுத்தமான நீரில் பல வண்ணமயமானப் பறவைகள் வாழ்வது மிகப் பெரிய ஆச்சர்யமே. வழக்கம் போல நாமக்கோழி, முக்குளிப்பான் உள்ளிட்ட பறவைகளே தென்பட்டன. சரி, வீட்டிற்கு கிளம்பலாம் என்று வண்டியைத் திருப்பியப் போது திடீரென்று உள்ளத்தில் ஏற்பட்ட ஒரு உந்துதல் என்னை நிற்கச்செய்தது. ஏரியில் ஏதோ ஒரு வித்தியாசமான உருவம் தெரிகிறதே என்று பார்த்தேன். தொலைவில் இருந்து பார்க்கும் போது ஏரியில் வெட்டப்பட்ட அடிமரத்தின் அடியில் இருந்து ஒரு குச்சி நீட்டிக்கொண்டு இருப்பது போலத் தெரிந்தது. சரி ஒன்றுமில்லை, திரும்பலாம் என்று நினைத்த போது அந்தக் குச்சி இலேசாக அசைந்தது.
அருகில் சென்று உன்னிப்பாகப் பார்த்தேன். ஆஹா! அது ஒரு பாம்புத்தாரா (ORIENTAL DARTER Anhinga melangogaster)! என்னே ஒரு அழகானப் பறவை! அன்று முதன்முதலாகப் பார்த்தப் போது ஏற்பட்ட மகிழ்ச்சி அளவிட முடியாதது. நாற்பது அடி தொலைவிலிருந்து தரிசனம் கொடுத்தது சேலம் பறவையியல் கழகத்தின் முத்திரைப் பறவையான எங்கள் பாம்புத்தாரா!
பெயர்க்காரணம் புரிந்தது
அந்தச் சாலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். என்னைத் தவிர அதைக் கண்டுகொள்ள ஆளில்லை. தன் இரண்டு இறக்கைகளையும் விரித்துக்கொண்டு “உங்கள் ஊருக்கு வந்திருக்கிறேன். என்னைத் தழுவிக்கொள்” என்று சொல்வது போல நின்றுகொண்டிருந்தது. ஏரிக்கு முதல் வருகை என்பதால் புகைப்படம் எடுத்துக்கொள்ள நண்பர் ராஜ்குமாரை அழைத்தேன். பத்து நிமிடத்தில் வருகிறேன் என்று சொன்னவர் என்ன காரணத்தினாலோ அரை மணி நேரமாகியும் வரவில்லை. “உனக்காக நான் இறகுகளை விரித்துக்கொண்டு அழகாக நிற்கிறேனே, என்னை வரவேற்க ஒரு புகைப்படம் கூட எடுக்க மாட்டாயா?” என நினைத்தது போலும் உடனே நீருக்குள் இறங்கி மறைந்து விட்டது. அது நீந்திச் செல்லும் போது தான் கவனித்தேன். மற்ற பறவைகள் எல்லாம் நீருக்கு மேல் மிதந்து கொண்டு செல்ல பாம்புத்தாராவின் உடல் மட்டும் நீருக்குள் இருக்க அதன் தலை மட்டும் பாம்பு போல் நீட்டிக்கொண்டு சென்றது. அப்போதே அது ஏன் பாம்புத்தாரா என்று அழைக்கப்படுகிறது என்பது புரிந்தது. தொலைவிலிருந்து பார்க்கும் போது நீரில் ஒரு குச்சி நகர்ந்து செல்வது போலத்தான் இருந்தது. அரை மணி நேரமிருந்தும் ஒரு புகைப்படம் கூட எடுக்கவில்லையே என்ற ஏமாற்றத்துடன் வீட்டிற்குச் சென்றேன்.
கோபித்துக்கொண்டப் பாம்புத்தாரா
புகைப்படம் எடுக்காமல் வந்துவிட்டோமே என்ற நினைவே என்னை முழுவதுமாக பாதித்திருந்தது. நண்பரை மீண்டும் அலைபேசியில் தொடர்பு கொள்ளாமல் நேராக ஸ்டுடியோவிற்கே சென்று ஆளை அப்படியே வண்டியில் தூக்கிப் போட்டுக்கொண்டு பத்து மணி அளவில் ஏரிக்குச் சென்றேன். வரும்போதே நம் பாம்புத்தாரா எங்கும் சென்றுவிடக் கூடாது என்று சாமியைக் கும்பிட்டுக்கொண்டே வந்தேன்.
அப்பாடா! இன்னும் என் பாம்புத்தாரா அதே இடத்தில் நின்று கொண்டிருந்தது. நண்பர் பையிலிருந்து கேமிராவை எடுத்து பாம்புத்தாரவை நோக்கி வைத்தார். சிறிய, கரிய குன்றென நின்றிருந்தப் பாம்புத்தாரா, “உங்களுக்காக நான் வெயிட் பண்ண டைம் முடிஞ்சு போச்சு. ஸோ, நான் கெளம்பறேன்” என்று கோபித்துக்கொண்டு பறந்து விட்டது. மீண்டும் ஒரு முறை பெரும் ஏமாற்றமும் வேதனையுமே மிஞ்சியது.
ஒரு வாரத்திற்குப் பின் சிறகிறங்கியது
நமக்கு கொடுத்து வைத்ததெல்லாம் அவ்வளவு தான் என வீடு திரும்பினேன். பவளத்தானூர் ஏரியைக் கடந்து செல்லும் போதெல்லாம் பாம்புத்தாரா கோபம் தணிந்து மீண்டும் வந்திருக்குமா என்று பார்த்துக்கொண்டே செல்வேன். ஒரு வாரம் கழிந்தது.
அன்று பள்ளி செல்ல காலை 08.30 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டேன். ஏரியைக் கடக்கும் போது ஆர்வத்துடன் தேடினேன். என்ன ஒரு ஆச்சரியம்! மீண்டும் அதே இடத்தில் சிறகிறங்கி வந்திருந்தது எங்கள் பாம்புத்தாரா! எனக்கோ அளவில்லாத மகிழ்ச்சி! நண்பரை அலைபேசியில் தொடர்புகொள்ள உடனடியாக அவரும் கேமிராவோடு வந்துவிட்டார். அப்புறம் என்ன? ஒரு கிளிக்கோடு நிறுத்துவோமா? பல படங்கள் கிளிக்கியாச்சு!
என் மனதில் இடம் பிடித்த பாம்புத்தாரா இனி எங்கள் வீட்டிலும் இடம் பிடிக்க புகைப்படமாக மாறியது! மீண்டும் சந்திப்போம் என நன்றி சொல்லிவிட்டு நான் பள்ளிக்குச் செல்கையில் அது மீன் வேட்டைக்குச் சென்றுவிட்டது!