தி ஹிந்து நாளிதழின் உயிர் மூச்சுப் பகுதியில் 04-07-2015 அன்று வெளியான கட்டுரை. எழுத்து: சு. வே. கணேஷ்வர்.
பறவை நோக்குதலில் (Bird watching) உங்களுக்கு ஆர்வமிருந்தால், அதைத் தொடங்கிய நாட்கள் சுவாரசியமாகவும் வேடிக்கைகள் நிறைந்ததாகவும் நீங்காத நினைவுகளாக நெஞ்சில் வலம்வரும். நாம் பார்த்த பல பறவைகளைத் தவறாக அடையாளம் காண்பதும் பின்னாளில் அந்நிகழ்வுகளையும் நமது அறியாமையையும் எண்ணி மனதுக்குள் புன்னகை பூப்பதும் பறவை ஆர்வலர்களின் வாழ்க்கையில் தோன்றும் இன்பமான தருணங்களில் ஒன்று.
குழந்தைப் பருவம் முதலே அனைத்து உயிர்களிடமும் இயற்கையான ஈர்ப்பு இருந்தாலும் குடும்பத்தின் உதவியின்றி, நானே அனைத்தையும் தேடித் தேடிக் கற்றுக்கொண்டது சிறு வயதில் சவாலான காரியமாகவே இருந்தது. 2007-ம் ஆண்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைத்த தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் நீர்நிலைகள் குறித்த ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தேன். தேசிய அளவில் ‘இளம் விஞ்ஞானி’ என்ற அடையாளம் அதற்குக் கிடைத்த பின்னரே, சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளில் என் ஈடுபாடு அதிகரித்தது.
இணையதளமும் இருநோக்கியும்
சேலத்தில் உள்ள கன்னங்குறிச்சி மூக்கனேரி ஏரிக்கு அடிக்கடி சென்றுவந்ததால் பறவைகள் மீது தானாகவே காதல் ஏற்பட்டது. பறவைகளின் பெயர்களைக் கண்டறிய உதவும் களவழிகாட்டிகள் (Field guides) பற்றி, அப்போது நான் அறிந்திருக்கவில்லை. பள்ளிப் படிப்பு, பிற போட்டிகள் மற்ற நாட்களை எடுத்துக்கொள்ள, விடுமுறை நாட்களில் மட்டுமே என் பறவை நோக்கும் செயல்பாடு மூன்று வருடங்களைக் கடந்தது. பல ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவிலிருந்து என் மாமா வாங்கிவந்த 20×60 இருநோக்கி (Binocular), ஒரு குறிப்பேடு, பேனா, தண்ணீர் பாட்டில் போன்றவற்றை எடுத்துக்கொண்டு சைக்கிளில் புறப்பட்டுவிடுவேன்.
விக்கிபீடியா வழிகாட்டி
பார்க்கும் அனைத்துப் பறவைகளும் புதிதாக இருப்பதால், ஒவ்வொரு நொடியும் ஆச்சரியத்துக்கும் மகிழ்ச்சிக்கும் குறைவிருக்காது. எந்தப் பறவையைப் பார்த்தாலும் அதன் அடையாளங்களையும் பண்புகளையும் உடனடியாகக் குறித்துக்கொள்வேன். வீட்டுக்கு வந்தவுடன் அருகில் இருக்கும் இணைய மையத்துக்குச் சென்று கூகுளில் ‘Birds of TamilNadu’ என்று தட்டச்சு செய்தால், விக்கிபீடியா பக்கம் வரும். அதில் இருக்கும் அனைத்துப் பறவைகளையும் ஒவ்வொன்றாகப் பார்த்து என்னுடைய குறிப்புகளுடன் எது பொருந்துகிறது என்று கண்டுபிடிப்பேன். இவ்வாறு ஒரு பறவையைக் கண்டுபிடிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. செய்து பார்த்தால் நிச்சயம் உணர முடியும்.
வளர்ந்துவரும் இளம் பறவை ஆர்வலர்கள் ஒரு பறவையைத் தவறாக அடையாளம் கண்டுவிட்டால், மற்றவர்கள் அதைப் பெருங்குற்றமாகக் கருதுகின்றனர். முகநூலில் இதுபோன்ற கத்துக்குட்டிகளை ஏளனம் செய்வதும், ஒரு பறவையின் சரியான பெயரைக் கண்டறியும் முடிவுக்கு வரும்வரை குழாயடிச் சண்டையிடுவதையும் நிறைய பார்த்துள்ளேன். இது போன்ற விஷயங்களைத் தவிர்த்து, பறவை ஆர்வலர்களுக்கான நெறிமுறைகளைப் பின்பற்றுவது நல்லது.
நம் மனதுக்குப் புத்துயிரூட்டும் சிறந்த பொழுதுபோக்காக மட்டுமின்றி இயற்கையைக் காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணத்தை மனதில் விதைத்திடும் பறவை நோக்குதலை இன்றைய தலைமுறைக்குக் கற்றுக்கொடுத்து, இன்னும் பிறக்காத தலைமுறைகளுக்காக இயற்கையைப் பாதுகாப்பது நமது கடமைகளில் ஒன்று என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது!
சில சுவாரசியக் குறிப்புகள்:
- சேலம் கன்னங்குறிச்சி புது ஏரியில் ஒரு நாள் எட்டு பெரிய நீல நிறப் பறவைகளை முதன்முதலாகப் பார்த்தேன். ‘கர…கர…’ எனக் கத்திக்கொண்டும் ஒன்றை ஒன்று துரத்திக்கொண்டும் மேலிருந்து கீழாக வானில் பல கோணங்களில் பறந்து சாகசங்களை நிகழ்த்திக்கொண்டிருந்தன. தங்கள் இணையைக் கவரவே இது போன்ற சாகசங்களை அவை நிகழ்த்துகின்றன என்பது மட்டும் புரிந்தது. நிறம் மீன்கொத்தியைப்போல் இருந்தாலும், அலகு அவ்வாறில்லை. இது வேறு ஏதோ பெரிய மீன்கொத்தி வகையாக இருக்கலாம் என நினைத்துக்கொண்டே, அவற்றின் சாகசங்களை ரசித்துக்கொண்டிருந்தேன். பின்னரே தெரியவந்தது, அவை எட்டும் பனங்காடைகள் (Indian Roller) என்று.
- ‘கிக்கீ… கிக்கீ… கீகீ…’ என்ற குரல் கேட்டதும் கிளி எப்படி நிறுத்தி நிறுத்தி மெதுவாகவும் வழக்கத்துக்கு மாறாகவும் கத்துகிறது என்று குழம்பிப் போனேன். பின்னாளில் நான் கேட்ட ‘கிக்கீ’ வல்லூறுக்குச் (Shikra) சொந்தம் எனத் தெரிந்துகொண்டேன். பார்ப்பதற்குக் கழுகை ஒத்திருந்தாலும், மரங்களில் அமர்ந்து ஊர்வனவற்றை வேட்டையாடும் வல்லூறுகளைச் பல பகுதிகளில் எளிதாகப் பார்க்கலாம்.
- வேதிவால் குருவியைப் பார்த்து வியக்காதவர் இருக்க முடியாது. நிறைய பேர் இதன் அழகைப் பார்த்தே பறவை நோக்குவதற்கு வந்துள்ளனர் என்பதையும் மறுக்க முடியாது. விக்கிபீடியா பக்கத்தில் Asian Paradise Flycatcher from Palani Hills என்ற ஒளிப்படத்தைப் பார்த்து, ஓஹோ இதைப் பார்க்கப் பழனி மலைக்குத்தான் செல்ல வேண்டுமா என்று கவலைகொண்டதும் உண்டு. (கவனிக்க: பழைய பெயர்: Asian Paradise Flycatcher. புதிய பெயர்: Indian Paradise Flycatcher. பறவை புதிய பெயராலேயே அழைக்கப்பட வேண்டும்.)
- குறிப்பிட்ட சில பறவை இனங்களில் பாலின ஈருருவத்தோற்றம் (Sexual dimorphism) இருப்பது பற்றி தெரியாததால், குயில்களில் (Asian Koel) ஆண், பெண் வித்தியாசத்தைக் கண்டு அதிசயித்திருக்கிறேன். ஆண் பறவை பளபளவென்று கறுப்பாக உள்ளது. ஆனால், பெண் பறவையோ பழுப்பு நிறத்தில் உடல் முழுதும் நிறைய வெண்புள்ளிகளுடன் காணப்படுகிறது. இதை எப்படி ஒரே இனம் என்று விஞ்ஞானிகள் வரையறுத்தார்கள் என்று யோசித்திருக்கிறேன். ஆனால், அது தகவமைப்பின் ஒரு பகுதிதான் என்பது பின்னால் புரிந்தது.
- கரும்பருந்துகளை (Black Kite) எளிதாகக் கண்டறிய, அவற்றின் நீண்ட வாலில் பிளவு இருப்பதே முக்கியமான அடையாளம். அது தெரியாமல் பார்க்கும் அனைத்துக் கரும்பருந்துகளையுமே ஆளிக்கழுகுகள் (Tawny Eagle) எனக் குறித்து வைத்திருந்தேன். மேலும், ஒரு முறை தேன் பருந்தை (Oriental Honey-buzzard) பார்த்து, ராஜாளிக் கழுகு (Bonelli’s Eagle) என்று தவறாக நினைத்துள்ளேன்.
- உடல் முழுக்கக் கருப்பும், நீண்ட வாலும், பாக்கு நிற இறக்கைகளும் கொண்ட பறவையை மாந்தோப்பு ஒன்றில் பார்த்தேன். பார்ப்பதற்குக் குயில் போல இருந்தது. இறக்கையின் நிறத்தை மட்டுமே கணக்கில்கொண்டு, ஹைய்யா ஒரு செவ்விறகுக் குயிலை (Chestnut-winged Cuckoo) பார்த்துவிட்டேன் என்று மகிழ்ச்சியில் துள்ளிக்கொண்டு ஓடியது இப்போதும் ஞாபகம் இருக்கிறது. பின்னரே தெரிந்துகொண்டேன் அது பரவலாகத் தென்படும் செண்பகம்/செம்போத்து (Greater Coucal) என்று. அதுவும் குயில் இனத்தைச் சேர்ந்ததுதான்.
- குருவியின் நிறமுடைய ஒரு பெரிய பறவை வயல்களில் அங்குமிங்கும் ஓடிக்கொண்டு பூச்சிகளைச் சுவைத்துக்கொண்டிருந்தது. அது ஒரு நெட்டைக்காலி (Pipit sp.). ஆனால் என்ன இனம் என்று பார்த்தபோது தெரியாது. அப்பறவை நெல் வயல்களின் அருகே சுற்றிக்கொண்டிருந்த காரணத்தை வைத்து, அது நெல்வயல் நெட்டைக்காலியாகத்தான் (Paddyfield Pipit) இருக்க வேண்டுமென்று முடிவுக்கு வந்தேன்.
- ஆண் தேன்சிட்டுகளில் (Sunbirds), இறகு உதிரும் பருவம் (Eclipse plumage) இருப்பது பற்றி எனக்குத் தெரியாது. அப்படி ஒரு தேன்சிட்டைப் பார்த்தபோது, நானும் ஒரு புதுப் பறவை இனத்தைக் கண்டுபிடித்துவிட்டதாக நானே நம்பிக்கொண்டு மகிழ்ச்சியில் துள்ளியிருக்கிறேன்.
- இவற்றையெல்லாம்விட வேடிக்கையான விஷயம் ஒன்று உண்டு. வினாடி வினா போட்டிகளில் பங்கேற்பதற்காக, நாடுகளின் தலைநகரங்கள், தேசிய விலங்குகள், பூக்கள் போன்றவற்றைப் படிக்க வேண்டியிருக்கும். அமெரிக்காவின் தேசியப் பறவை வெண்தலைக் கழுகு (Bald Eagle). ஒரு முறை கன்னங்குறிச்சி ஏரியில் அமெரிக்காவின் தேசியப் பறவையைக் கண்டது மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது. அலகின் வடிவம், உடலின் நிறம் என எவ்வித அடையாளங்களையும் கருத்தில் கொள்ளாமல் தலையும் கழுத்தும் வெள்ளை நிறத்தில் இருந்ததால் செம்பருந்துக்கு (Brahminy Kite), வெண்தலைக் கழுகு (Bald Eagle) எனப் பெயர் சூட்டியதைப் போலப் பெரிய வேடிக்கை வேறு என்னவாக இருக்க முடியும்?